திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
நான்காம் திருமுறை
4.35 திருவிடைமருதூர்
காடுடைச் சுடலை நீற்றர்
    கையில்வெண் டலையர் தையல்
பாடுடைப் பூதஞ் சூழப்
    பரமனார் மருத வைப்பிற்
தோடுடைக் கைதை யோடு
    சூழ்கிடங் கதனைச் சூழ்ந்த
ஏடுடைக் கமல வேலி
    இடைமரு திடங்கொண் டாரே.
1
முந்தையார் முந்தி யுள்ளார்
    மூவர்க்கு முதல்வ ரானார்
சந்தியார் சந்தி யுள்ளார்
    தவநெறி தரித்து நின்றார்
சிந்தையார் சிந்தை யுள்ளார்
    சிவநெறி யனைத்து மானார்
எந்தையார் எம்பி ரானார்
    இடைமரு திடங்கொண் டாரே.
2
காருடைக் கொன்றை மாலை
    கதிர்மணி அரவி னோடு
நீருடைச் சடையுள் வைத்த
    நீதியார் நீதி யாய
போருடை விடையொன் றோ
    வல்லவர் பொன்னித் தென்பால்
ஏரடைக் கமல மோங்கும்
    இடைமரு திடங்கொண் டாரே.
3
விண்ணினார் விண்ணின் மிக்கார்
    வேதங்கள் நான்கும் அங்கம்
பண்ணினார் பண்ணின் மிக்க
    பாடலார் பாவந் தீர்க்குங்
கண்ணினார் கண்ணின் மிக்க
    நுதலினார் காமர் காய்ந்த
எண்ணினார் எண்ணின் மிக்கார்
    இடைமரு திடங்கொண் டாரே.
4
வேதங்கள் நான்குங் கொண்டு
    விண்ணவர் பரவி ஏத்தப்
பூதங்கள் பாடி யாட
    லுடையவன் புனிதன் எந்தை
பாதங்கள் பரவி நின்ற
    பத்தர்கள் தங்கள் மேலை
ஏதங்கள் தீர நின்றார்
    இடைமரு திடங்கொண் டாரே.
5
பொறியர வரையி லார்த்துப்
    பூதங்கள் பலவுஞ் சூழ
முறிதரு வன்னி கொன்றை
    முதிர்சடை மூழ்க வைத்து
மறிதரு கங்கை தங்க
    வைத்தவர் எத்தி சையும்
எதிதரு புனல்கொள் வேலி
    இடைமரு திடங்கொண் டாரே.
6
படரொளி சடையி னுள்ளாற்
    பாய்புனல் அரவி னோடு
சுடரொளி மதியம் வைத்துத்
    தூவொளி தோன்றும் எந்தை
அடரொளி விடையொன் றேற
    வல்லவர் அன்பர் தங்கள்
இடரவை கெடவு நின்றார்
    இடைமரு திடங்கொண் டாரே.
7
கமழ்தரு சடையி னுள்ளாற்
    கடும்புனல் அரவி னோடு
தவழ்தரு மதியம் வைத்துத்
    தன்னடி பலரும் ஏத்த
மழுவது வலங்கை யேந்தி
    மாதொரு பாக மாகி
எழில்தரு பொழில்கள் சூழ்ந்த
    இடைமரு திடங்கொண் டாரே.
8
பொன்றிகழ் கொன்றை மாலை
    புதுப்புனல் வன்னி மத்தம்
மின்றிகழ் சடையில் வைத்து
    மேதகத் தோன்று கின்ற
அன்றவர் அளக்க லாகா
    அனலெரி யாகி நீண்டார்
இன்றுட னுலக மேத்த
    இடைமரு திடங்கொண் டாரே.
9
மலையுடன் விரவி நின்று
    மதியிலா அரக்கன் நூக்கத்
தலையுட னடர்த்து மீண்டே
    தலைவனாய் அருள்கள் நல்கிச்
சிலையுடை மலையை வாங்கித்
    திரிபுர மூன்றும் எய்தார்
இலையுடைக் கமல வேலி
    இடைமரு திடங்கொண் டாரே.
10
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com